திங்கள், 31 அக்டோபர், 2016

முண்டாசுக்கவியே ! மீண்டு வா – மீண்டும் வா !

நரை கூடி
கிழப்பருவம்
கூடுமுன்னே
கரை கடந்த புயலே !
முண்டாசுக்கவியே !
மீண்டு வா – நீ
மீண்டும் வா !

சாதிக்கொன்றாய்
சங்கம் கொண்டு
நாட்டை துண்டாடும்
நயவஞ்சகக் கூட்டம்தனை
விரட்டியடித்திட
விரைந்து வா விடியலே !

நூற்றாண்டுகள் மாறியபோதும்
சாதிமத இருள் இன்னும்
மண்டியே கிடக்கிறது
மனத்துக்குள்ளே !

காரிருள் கலைத்து
சுதந்திர பகலை சொந்தமாக்கிட
கவிதைக்கதிர் பரப்பி வா 
கதிரவனே !


அடே காலனே !
சிறு புல்லாக
உன்னை மதித்த கவிஞனை
கள்ளத்தனமாக
கவர்ந்து சென்ற காலனே !
கண்ணியமாய்
உனக்கொரு கடைசி செய்தி !

சுயநல வெம்மை சுட்டெரிப்பதால்
பாரதம் இங்கே
பாலையாக தகிக்கிறது !

சுகந்தம் பரப்பும்
சோலையாய் அதை மாற்ற
எங்கள்
சமதர்மத் தென்றலை
சம்மதித்து அனுப்பிவிடு !
சமாதானம் கொள்வேன் உன்னோடு !

வெட்டிக்கதை பேசி - நாட்டை
குட்டிச் சுவராக்கும்
குள்ளநரி கூட்டம்தனை
வேட்டையாடி விரட்டிட ,  
எட்டயபுர சிங்கத்தை
பவ்யமாக அனுப்பிவை !
பாவமென விடுவேன் உனை !

கனவுத் தேடலிலே
வாழ்வை தொலைத்து விட்டு
இருளிலே தடுமாறும்
மனிதர்களை
விழித்தெழ செய்யும் 
விடியலை
விரைந்து அனுப்பிவை !

தாமதமாகுமெனில்......
அவன் 
முண்டாசையாவது
முன்னால் அனுப்பிவை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக