ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

பஞ்சவன்மாதேவீஸ்வரம் எனும் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, பட்டீஸ்வரம்

பஞ்சவன்மாதேவீஸ்வரம் எனும் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை ,  பட்டீஸ்வரம் 

தன் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது,     
 தாஜ்மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் மகன் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?   அதுவும் தன்னை பெற்றெடுக்காத தாய்க்கு மகன் கட்டிய கோயில் அது. 
  
உலகமகா தேவியார், சோழ மாதேவியார், திருபுவன மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார்’ என பதினாறு பேரின் பெயர்கள்  ராஜ ராஜனின் மனைவிகள் என்றும்,   ‘நம் பெண்டுகள்’ என்று அவராலேயே தஞ்சைப் பெரிய கோவிலில் கொடைப்பற்றிய குறிப்பில் பொறித்து வைக்கப் பட்டுள்ளது. 

தந்திசக்தி விடங்கி என்றழைக்கப்படும் உலக மகா தேவியாரே பட்டத்து அரசி .

இராஜராஜ சோழன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தார் . 
இராஜராஜசோழனின் மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள்.

ஆனால் இராஜேந்திரனை மிகவும் பாசத்தோடு வளர்த்தவள் பழுவேட்டரையர் குலப்பெண்ணான பஞ்சவன்மாதேவி.

 ராஜேந்திரனை தவிர வேறு ஆண்வாரிசுகள் உருவாகி விடக்கூடாது என்ற திடமான முடிவில் இருந்தவள் பஞ்சவன்மாதேவி. அதற்காகவே தனக்கு குழந்தை பிறந்துவிடக்கூடாது, தான் மலடாகவேண்டும் என்பதற்காக மருந்தினை உட்கொண்டவள் இந்த பஞ்சவன்மாதேவி என்ற கதைகளும் உண்டு.

தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த அத்தகைய சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான்   கங்கை முதல் கடாரம் வரை வென்ற “ராஜேந்திர சோழன்”. 

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.   
 
இது கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரத்தில் அமையப்பெற்றுள்ளது.

பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்து கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.


ஸ்ரீவிமானத்து அதிஷ்டானத்து கண்டப்பகுதியில் ராஜேந்திர சோழனின் 7ம் ஆட்சியாண்டில் (கி.பி.1019) பொறிக்கப்பெற்ற நீண்ட கல்வெட்டுச் சாசனமொன்று காணப்பெறுகின்றது. அதில் இவ்வாலயத்தை பள்ளிப்படை பஞ்சவன் மாதேவீஸ்வரம் என்றுள்ளது.

சிறிய ராஜகோபுரம் கடந்து கோயிலுக்குள் சென்றால் அழகிய ஸ்ரீவிமானம், அர்த்தமண்டபம் முகமண்டபம் ஆகியவற்றுடன் முழுதும் கருங்கற்களால் எடுக்கப்பெற்றதோர் ஆலயமாக பஞ்சவன் மாதேவீஸ்வரம் காட்சி நல்குகின்றது.. 

கோபுரம் கடந்து திருசுற்றை அடையும்போது மகாமண்டப வாயிலில் இரு துவார பாலகர், இத்தனை பேரழிவுகளையும் கடந்து அவ்வாலயத்தைக் காத்து நிற்கும் காட்சியை நாம் கண்டு மகிழலாம். 

பழுவேட்டரையர்களின் கலைப்பாணியில் அமைந்த சிற்பத்தூண்களையும், பிற சிற்பங்களையும் கண்டு ரசித்தவர்கள் இங்கு காணப்படும் அந்த சிம்மத்தூண் பழுவேட்டரையர் கலைப்பாணியில் அமைந்த ஒன்று என்பதை கண்டு கொள்வர்.

இங்குள்ள நந்தியின் பேரழகை எடுத்துக்கூறுதல் இயலாத ஒன்றாம். சலங்கை மாலைகளைக் கழுத்தில் கொண்டவாறு உயிரோடு ஒரு காளை படுத்திருப்பதை நாம் காண்போம். அதனைக் கையால் தொட்டால்தான் அது கல் என்பதை நாம் அறிவோம்.

கருவறையினுள் தாராலிங்கமாக ஈசன் அருள்பாலிக்கிறார்.
இறைவியின் பெயர் விமலநாயகி. 
இறைவியின் கைகளில் ஆறு விரல்கள் இருப்பதாக இங்கு பூஜை செய்பவர் கூறினார்.
















சோமநாத சுவாமி திருக்கோயில், கீழப்பழையாறை

 கீழப்பழையாறை :

குடந்தைக்கு அருகில் 5கிமீ தொலைவில் உள்ளது. 

கீழப்பழையாறை : சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம். 

பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை.

 பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று.  சோழர்களின் அரண்மனை கூட இங்கு இருந்தது என்ற செய்திகள் வரலாற்றில் உள்ளன.

சோழர் அரண்மனை இருந்த இடம் “சோழன்மாளிகை” என்னும் தனி ஊராக உள்ளது

இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் – பழையாறை நகர் என்றும்,              8-ஆம் நூற்றாண்டில் – நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டுகளில் – முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.

மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த தலம்.

மங்கையர்க்கரசியார் – இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். 

அமர்நீதி நாயனார் அவதரித்த  தலம்


கீழப்பழையாறையில் கற்றளியாக இருந்த இடம் இன்று காலத்தின் கரங்களில் சிக்குண்டு சிதைந்தி நிற்கும் கோயில் உள்ளது.


இறைவன் : சோமநாத சுவாமி

இறைவி: சோமகமலாம்பிகை

பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது.

மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது.

தாராசுரம் கோவிலின் முன்மாதிரியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும்.

அக்கோபுரத்தினை அடுத்து வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. 

சோமகமலாம்பிகை சன்னதிக்குச் செல்லும் படிக்கட்டில் தென்திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு புறத்தில் சிற்றுவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நிற்க, அவனது தலையின் மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்கு மேல் கொண்டுவந்து வலது காதைத் தொடும் நிலையில் உள்ள காட்சி ஊர்த்துவ தாண்டவமாக வடிக்கப்பட்டுள்ளது.


ராஜராஜனின் தமக்கை குந்தவைக்கு மிகவும் பிடித்த கோயிலாம் இது. ஆனால் இன்று இறைவனும், இறைவியும் ஏகாந்தமாக இருக்கிறார்கள். அவ்வப்போது நாமும் சென்று அவர்களது மோனநிலையை கலைப்போம். 




























ராஜராஜசோழன் பள்ளிப்படை, உடையாளூர்

 கும்பகோணம் நகரில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ளது ஸ்ரீசிவபாதசேகரமங்கலம் எனும் உடையாளூர் .


 முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1112) ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில்  (உடையாளூரில்) ராஜராஜதேவரின் திருவுருவம் திகழ்கின்ற ஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை என்ற பெயரில் மாளிகை ஒன்று இருந்துள்ளது. 


அம்மாளிகையின் முன்பகுதியில் அமைந்திருந்த மண்டபப்பகுதி சிதைவடைந்து காணப்பெற்றதால் பிடவூர் எனும் ஊரினைச் சார்ந்த பிடவூர் வேளாண்வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் அப்பகுதியினை மீண்டும் எடுப்பித்து புனர்நிர்மாணம் செய்தார் என்ற கல்வெட்டு உடையாளூரில் உள்ளது.


இதனால் உடையாளூரில் முதலாம் ராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப்பெற்ற ஒரு மாளிகை  இருந்தது என்பது உறுதியாகின்றது.


 அது முதலாம் இராஜராஜ சோழனின் நினைவு மாளிகையே, அதனை பள்ளிப்படை (சமாதி கோயில்) எனக்கூட கருத வாய்ப்புள்ளது.


அந்த மாளிகை உடையாளூரின் எப்பகுதியில் இருந்தது என்பது இதுகாறும்  உறுதி செய்ய இயலவில்லை. உள்ளூர் ஆற்றங்கரை அருகில் ஒரு வாழைத்தோட்டத்தில் புதைந்த நிலையில் காணப்பெறும் சிவலிங்கம் திகழும் இடமே அப்பண்டைய மாளிகை என்பது அமரர் என். சேதுராமன் என்ற ஆய்வு அறிஞரின் முடிவாகும்.


அதனையே ராஜராஜசோழன் பள்ளிப்படையாக கருதி ஊர்மக்கள் வழிபாடு செய்கின்றனர்.


2013ல் பார்த்தபோது இருந்ததற்கும் 2022க்கும் அந்த இடத்தில் சிறிய மாற்றங்கள் உள்ளன. 








தென்னகத்தையே ஆட்சி செய்தவனின் அடையாளமே இன்று காணவில்லை. இதில் நாமெல்லாம் எம்மாத்திரம் ??