ஞாயிறு, 25 மார்ச், 2012

உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11




1987-ஆம் ஆண்டு ஜுலை 11-ஆம் நாள் உலக மக்கள்தொகை 500 கோடியை தாண்டியது. மக்கள்தொகை பெருக்கத்தின் அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது ஜுலை 11-ஆம் நாளை “உலக மக்கள் தொகை தினமாக” அறிவித்தது. 1901-ல் 160 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 1960-ல் 300 கோடியாகவும், 1974-ல் 400 கோடியாகவும், 1987-ல் 500 கோடியாகவும் அதிகரித்தது். தற்போது உலக மக்கள் தொகை 690.8 கோடியாக உள்ளது.. இந்த தினத்தில் பெருகிவரும் மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதுடன், அதனை கட்டுபடுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதையும் அறியச்செய்ய வேண்டும். 2011 -ம் ஆண்டின் உலக மக்கள் தொகை தின செய்தியாக “அவசரமான உளகளாவிய பிரச்சனைகளின் மீது கவனத்தை கொணர்தல்” ( Calling Attention to Urgent Global Issues ) என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.



இந்தியா – தமிழ்நாடு - புள்ளிவிவரம்

2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 102.9 கோடியாகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 6.2 கோடியாகும். 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாகும். தமிழ்நாட்டின் தற்போதய மக்கள்தொகை 7.2 கோடியாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக திகழ்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.38 சதவிகித மக்கள்தொகை வளர்ச்சி ஏற்படுகிறது. அதாவது மக்கள்தொகை நாளொன்றுக்கு சராசரியாக 44353 அதிகரிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 51 குழந்தைகள் இந்தியாவில் பிறக்கின்றன. ஆனால் “ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை” என்ற கட்டாய சட்டத்தின் மூலம் சீனாவில் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி 0.49 சதவிகிதமாக உள்ளது. இதே நிலை தொடருமானால் 2050-ல் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ” உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு” என்ற முதலிடத்தை இந்தியா பிடிக்கும். 2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 180 கோடியாகவும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.



மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவுகள்:

பெருகிவரும் மக்கள்தொகையால் விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறிவருகின்றன. இதனால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி குறைகிறது. நீர்நிலைகள் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு வருகிறது. நிலத்தடி நீர்வளம் குறைந்துபோகிறது.

மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. தனிநபர் வருமானம் குறைகிறது. குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குழந்தைகளின் கல்வி, உணவு, நலம் போன்றவற்றை பாதிக்கிறது. சரிவிகித உணவு கிடைக்காமல் போவதால் உடல்நலம் , சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அடிப்படைத்தேவைகள் முழுதும் கிடைக்காமல் போகிறது. வருங்கால சமுதாயம் பாதிப்புக்கு உள்ளாவதால் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்றவை சமுதாயத்தில் வளர்கின்றன. இவை மட்டுமின்றி இயற்கை வளங்கள் தட்டுப்பாடு, சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு, உலக வெப்பமாதல் போன்றவற்றிற்கும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக அமைகிறது.



குடும்பநலம் :

1952-ம் ஆண்டு இந்தியா “தேசிய குடும்பநலத் திட்டத்தை” உலகில் முதல்முறையாக செயல்படுத்தியது. குடும்பநலம் என்பது குழந்தை பிறப்பதை தடுப்பது மட்டுமல்ல, பேறுசார் மற்றும் தாய்சேய் நலத்தை பாதுகாத்து, குழந்தை பருவம், வளரிளம் பருவம், தம்பதியர் நலம் என ஒவ்வொரு நிலையிலும் நலமாக வாழவைப்பதாகும். குடும்பநல முறைகளை மேற்கொள்வதால் அளவான குடும்பம் அமைகிறது. தாயின் உடல்நலத்தோடு, குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நலமும் பேணப்படுகிறது. அளவான குடும்பம் வளமாக வாழ்கிறது. குடும்பநலத் திட்டத்தின் காரணமாக பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சிசு மரண விகிதம் போன்றவை குறைக்கப்பட்டுள்ளன.



ஆண்களுக்கான நவீன தழும்பில்லா வாசக்டமி குடும்பநலமுறை, பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை போன்றவை நிரந்தர கருத்தடை முறைகளாகும். கருத்தடை வளையம் (Copper – T ), கருத்தடை மாத்திரைகள், அவசரகால கருத்தடை மாத்திரைகள், நிரோத் போன்றவை தற்காலிக கருத்தடை முறைகளாகும்.



நவீன தழும்பில்லா குடும்பநல வாசக்டமி குடும்பநலமுறை ஏற்கும் ஆண்களுக்கு ரூபாய் 1100 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது, பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சையை விட, ஆண்களுக்கான நவீன தழும்பில்லா வாசக்டமி முறை எளிதானது. இம்முறையில் உள்நோயாளியாக தங்கவேண்டிய அவசியமில்லை. இரத்த இழப்பின்றி, தையலின்றி ஒருசில நிமிடங்களில் வாசக்டமி செய்யப்பட்டுவிடும். ஆண்மைகுறைவு ஏற்படுவதில்லை. தாம்பத்திய வாழ்க்கை சுகமாக இருக்கும். அன்றாட பணிகளை வழக்கம்போல செய்யலாம்.

பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சைக்கு ரூபாய் 600 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. பெண்களுக்கான கருத்தடை வளையம் ஒருமுறை பொருத்திக்கொண்டால் 10 வருடங்கள் வரை குழந்தை பிறப்பை தவிர்க்கலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் ஆகிய இடங்களில் கருத்தடை வளையம் இலவசமாக பொருத்தப்படும்.



கடமை:

எனவே நாட்டுமக்கள் அனைவரும் “சிறு குடும்பம் – சீரான வாழ்வு” என்ற நெறியினை பின்பற்றினால் வீடு மட்டுமல்ல, நாடும் வளம்பெறும். நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் எரிபொருள்கள் போன்றவை வருங்கால தலைமுறைக்கு கிடைக்காமல் போகும் நிலை கூட வரலாம். எனவே மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும். இந்த உலக மக்கள்தொகை தினத்தில் மக்கள்தொகை பெருக்கம் பற்றிய விழிப்புணர்வை பெறுவதும், ஏற்படுத்துவதும் நம் அனைவருடைய கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக